‘நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்” – இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து… ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவருடைய பிறந்த தினம் இன்று.
குழந்தைகளின் மனநிலை!
”வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்” என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய ஐன்ஸ்டீன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டார். அதனால்தான் அவர், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு இப்படிச் சொன்னார், ”குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள், ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பைக் கொல்லும் கொலைகாரர்களே.”
”அவன் ஒரு சிந்தனையாளன்!”
சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தார். இப்படித்தான் ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது மாமா (ரூடி), ”உன் மகன் ஆல்பர்ட்டைப் பார்… எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவன், ஓர் ஆராய்ச்சியாளன்; சிந்தனையாளன்” என்று நக்கலாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான், ஐன்ஸ்டீன் அன்னைக்குக் கோபம் தலைக்கு மீதேறிவிட்டது. எந்தத் தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பதுபோல… தன் தம்பியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ”அவன், ஒரு சிறந்த சிந்தனையாளன்; அறிவாளி… அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாகத் திகழப்போகிறான்” என்றார், முகத்தில் அடித்ததுபோன்று.
ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன் அன்னை சொன்னது… நூற்றுக்கு நூறு உண்மை. ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர்; சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார்; அழுக்கு ஆடையைப் பல நாள்கள்கூட அணிந்திருப்பார்; வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம்வருவார்; சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் வெளியே செல்வார். மறுமண மனைவி எல்ஸாவின் பேரிலேயே, அவர் நல்ல ஆடைகளை அணிவார்.
எளிமைக்கு உதாரணம்!
அப்படிப்பட்ட அந்த எளிமையான மாமேதை, ஓரிடத்துக்கு ஒருமுறை சொற்பொழிவாற்றச் சென்றபோது… அவருடன், அவர் மனைவி எல்ஸா செல்ல முடியவில்லை. ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து… ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்தவர், ”இந்தப் பெட்டியில் நல்ல உடைகள் வைத்திருக்கிறேன். சொற்பொழிவுக்குச் செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்” என்றார். தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்ஸா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கித் திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆம், அவர் வைத்த ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்ஜா, தம் கணவரிடம்… ”ஏன் இந்த ஆடைகள் அடுக்கிவைத்தபடியே இருக்கின்றன… அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளவில்லையா” என்றார்.
எல்ஸா கேட்டதைக் கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம்… ”அடடா, எனக்கே மறந்தே போய்விட்டது. நீ கோபித்துக்கொள்ள வேண்டாம்” என்றவர், ”அது இருக்கட்டும். ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம்” என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். ”எல்லோரும் என் பேச்சைக் கேட்க வருகிறார்களா அல்லது என் ஆடையைப் பார்க்க வருகிறார்களா” என்பதே அது. பாவம் எல்ஸாவால் அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை.
ஐன்ஸ்டீன்
”என்னைத் தேடி வருகிறது!”
வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும் தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்களே… வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடங்கும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது… எந்தச் சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தொகை அவருக்குக் கிடைத்தபோது, அதை வெறுக்கவே செய்தார். ”எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது” என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்ஸாவிடம்… ”இந்தப் பணம் நமக்குத் தேவையில்லை. பாதித் தொகையைத் தர்ம காரியங்களுக்கும் மீதித் தொகையை மிலீமாவுக்கும் (ஐன்ஸ்டீனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம்” என்றார். அவர், கருத்துக்கு என்றுமே மறுப்புச் சொன்னதில்லை எல்ஸா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் தேனாய் இனித்தது.
”மகாத்மாவோடு ஒப்பிட வேண்டாம்!”
கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்த ஐன்ஸ்டீனிடம், அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ”நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்” என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், ”தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றார், அடக்கத்துடன்.
”அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது” என்று சொன்ன அந்த மாமேதை, கடைசிவரை அதேவழியில் பயணித்ததுடன்… ”மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது” என்று வாழ்ந்து, வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொண்டது.
No comments:
Post a Comment